என் மீது விழுந்த முதல் ஒளி உங்கள் கேமராவிலிருந்து வந்தது, இந்த ஒளியின் மூலம்தான் எனது எதிர்காலம் பிரகாசமாகியது என உருக்கமாக எழுதியுள்ளார் சூர்யா.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி. ஆனந்த் திடீரென மாரடைப்பால் காலமான சம்பவம் தமிழ் சினிமாவை சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. பல பிரபலங்கள் சமூக ஊடகங்களில் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மறைந்த கே.வி. ஆனந்துடன் (KV Anand) காப்பான் மற்றும் பிற படங்களில் ஒன்றாகப் பணிபுரிந்த நடிகர் சூர்யா, ஆனந்த் தனது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர் என்பது குறித்த ஒரு உணர்ச்சிபூர்வமான கடிதத்தை எழுதியுள்ளார்.
மறைந்த கே.வி. ஆனந்த் குறித்து நடிகர் சூர்யா (Actor Surya) எழுதியதாவது: "கே.வி. ஆனந்த் ஐயா, நாங்கள் அனைவரும் எதிர்கொண்டிருக்கும் உலகளாவிய தொற்றுநோயின் (Pandemic) கொடூரத்தை உங்கள் மரணம் கொடூரமான முறையில் நினைவூட்டுகிறது. நீங்கள் எங்களுடன் இப்போது இல்லை என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. ஏற்றுக்கொள்ள முடியாத உங்கள் இழப்பினால் உண்டான வருத்தத்தில், மறக்க முடியாத நினைவுகள் அலைகளாய் முன்னே வருகின்றன. நீங்கள் எடுத்த ஒரு புகைப்படத்தின் மூலம், சரவணன் சூரியாவாக மாறிய ஒரு அற்புதமான தருணம் நிகழ்ந்தது. சரியான கோணத்தில் ஒரு புதிய முகத்தை அறிமுகம் செய்த உங்கள் அர்ப்பணிப்பைப் பற்றி எண்ணி நான் இன்னும் பிரமிக்கிறேன். மெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகத்தில் நடந்த அந்த இரண்டு மணி நேர போட்டோஷூட், நான் ஒரு போர்க்களமா என்ற உணர்வை எனக்கு ஏற்படுத்தியது. மக்கள் என் மீது நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள் என்றால் அதற்கு ஒரே காரணம் நீங்கள்தான். அந்த புகைபடம் மட்டுமல்ல, நான் ஒரு நடிகனாக வெள்ளித்திரையில் அறிமுகமானபோது, கேமராவுக்குப் பின்னால் இருந்தவர் நீங்கள்தான்" என்று சூர்யா எழுதியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "என் மீது விழுந்த முதல் ஒளி உங்கள் கேமராவிலிருந்து வந்தது. இந்த ஒளியின் மூலம்தான் எனது எதிர்காலம் பிரகாசமாகியது. எனது திரைப்பட வாழ்க்கையில் நீங்கள் மறக்க முடியாத பங்களிப்பை செய்துள்ளீர்கள். உங்கள் வழிகாட்டுதலும் அன்பும் கவனிப்பும் என்னை மேலும் மேலும் நன்றாக செயல்பட ஊக்கமளித்தன. அயன் படத்தின் வெற்றி என்னை பலருக்கு பிடித்தவனாக்கியது. அதை நன்றிக்கடனுடன் திரும்பிப் பார்க்கிறேன். எனது முதல் படத்திலும் உங்கள் கடைசி படத்திலும் உங்களுடன் இணைந்து பணிபுரிந்தத பாக்கியத்தை நான் பெற்றேன். எங்கள் நினைவுகளில் நீங்கள் எப்போதும் இருப்பீர்கள் சார்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.
0 Comments